கொத்து, கொத்தாய் கொள்ளை போன இலங்கை தமிழர்கள்.........
"முள்ளி வாய்க்கால் தினம்"மே 16,17,18 - இரண்டு ஆண்டிற்கு முன்பொரு நாளில் இலங்கை அரசின் விதிமுறை மீறிய போரில் இருந்து தங்களை காக்க கோரி, குரல் எழுப்பிட "முள்ளி வாய்க்கால்" எனும் இடத்தில் திரண்டிருந்த 1.50 லட்சம் தமிழரை கொன்று குவித்தது இலங்கை அரசு. வெள்ளைக்கொடி காட்டி ஓடி வந்தோரையெல்லாம் கொன்ற அநியாயம் நடந்தேறிய 2-ஆம் ஆண்டு நினைவு நாள்.

ஈழத்தமிழர் உரிமை குறித்த நெஞ்சை பிசைந்த ஆனந்த விகடனில் வெளிவந்த விஷ்ணுபுரம் சரவணனின் கவிதை உங்கள் பார்வைக்கு கீழே.....

இது சுற்றுலா தேசம்தான் !

நீங்கள் இப்போது
நடந்துகொண்டிருக்கும் வீதியில்தான்
குழந்தையொன்று பின்னந்தலையும்
தாயுமில்லாமல் அழுதே இறந்தது
.

நீங்கள் நடங்கள்

நீங்கள் இப்போது

பார்க்கும் வீட்டில்தான்
போராளி ஒருத்தியை
நான்கைந்து பேர்
மொழிக் கலப்பற்றுப் புணர்ந்தார்கள்
.

நீங்கள் நடங்கள்!

நீங்கள் இப்போது
கால் நனைக்கும் கடற்கரையில்தான்
படகில் தப்பியோட முயன்ற
நிறைசூல் பெண் ஒருத்தி
சுடப்பட்டு இறந்துபோனாள்நீங்கள் நடங்கள்!

நீங்கள் இப்போது நிற்கும்
பதுங்கு குழியில்தான்
மேலே செல்லடியில் இறந்த
ஆறு மாதக் குழந்தையைத்
தூக்க இயலாமல்
கையில் துவக்கோடும்
தவிப்போடும் நின்றிருந்தான்
போராளி ஒருவன்.நீங்கள் நடங்கள்!


நீங்கள் இப்போது ஓய்வெடுக்கும் இடம்
அகதி முகாமாய் இருந்தபோது
நீர் பிடிக்கவும் மகனுக்காகவும் வரிசையில் காத்திருந்த
முதியவர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

நீங்கள் ஓய்வெடுங்கள்!

நாளை வேறொரு பகுதிக்குச் செல்லலாம்.
ஆமாம் இப்போது இந்நாட்டின்
எல்லாப் பகுதிகளுக்கும் செல்லலாம்.


சுற்றுலா தேசம் இது...
ஆயினும்
சுற்றி காட்டவும் சொல்லிக் காட்டவும்
இக்கதைகள் மாத்திரமே உலவுவதற்கு

நான் ஏதும் செய்வதற்கில்லை.