கூடங்குளம் - மக்களின் மீதான அரசின் அடக்குமுறை!
கூடங்குளம் அணுஉலை தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்கு அரசு தரப்பிலிருந்து தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படாத நிலையில், இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் கூடங்குளம் மக்களின்மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், இதேபோன்று மேற்கு வங்கத்தில் தொடங்கப்படவிருந்த ஓர் அணுஉலை திட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா முதலமைச்சர் பதவியேற்ற பிறகு ரத்து செய்துவிட்டார்.



தமிழகத்தில் மின்பற்றாக்குறை உள்ளது என்பது உண்மையே! ஆனால், இந்தப்பற்றாக்குறையை நெய்வேலி அனல் மின்நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை முழுவதும் தமிழகத்திற்கு ஒதுக்கினால் தீர்ந்துவிடும் நிலையில், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு 50% மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதே சமயம், இந்த மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு இயற்கையாக வந்து சேரவேண்டிய ஆற்றுநீரை ஆங்காங்கு அணைகளைக்கட்டி இம்மாநிலங்கள் தமிழகத்திற்குத் தண்ணீர் தராமல் வஞ்சித்து வருவதையும் மறந்துவிடக்கூடாது."காவிரி, பாலாறு, பெரியாறு ஆறுகளிலிருந்து தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க வேண்டும்" என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்தாத அந்த மாநில அரசுகளின் மீதும் அம்மாநிலத்தில் மக்களைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகள் மீதும் பாயாத தேசதுரோக வழக்குகள், உயிரச்சத்துடன் நியாயமாகப் போராடி வரும் தமிழக பொதுமக்களின்மீது பிரயோகிக்கப்பட்டிருப்பது நிச்சயமாக அநீதியே!


ஆங்கிலேயர் வசமிருந்த இந்தியாவில், அவர்களுக்கு எதிராகப் போராடியவர்கள்மீதும் இத்தகைய வழக்குகளே ஆங்கிலேயர்களால் பிரயோகிக்கப்பட்டன என்பதையும் தற்போது பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அரசுக்கு எதிராகப் போராடிவரும் மக்கள்மீதும் இத்தகைய சர்வாதிகார வழக்குகள் புனையப்பட்டு சுதந்திரமாக தங்கள் எதிர்ப்புணர்வைத் தெரிவிக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் முடக்கப்படுகின்றன.சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமென்பது உண்மையெனில், சேதுசமுத்திர திட்டத்தைப் பொருந்தாக் காரணம் சொல்லி முடக்கியவர்கள்மீதும் தேசதுரோக வழக்குகளைப் பதிவு செய்யவேண்டும். அதேபோல், மேற்குவங்கத்தில் அணுமின் நிலையம் அமைவதை நிறுத்திய மாநில முதல்வர் மம்தா பானர்ஜிமீதும் தேசதுரோக வழக்கைப்பதிவு செய்யவேண்டும். இல்லையெனில், அரசுகளால் தமிழர்கள் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுவதாகவே கருத நேரிடும்.நாங்கள் சுதந்திர மனிதர்கள், சட்டத்தின் ஆட்சி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பொதுமக்களை அடக்கியாளும் எந்த சட்டமும் ஆட்சியாளர்களும் அடையாளம் தெரியாமல் போனதாகவே வரலாறு சொல்கிறது. கூடங்குளம் அணு மின்நிலையம் விவகாரத்தில் நியாயமாகப் போராடிவரும் மக்களைக் கொடுமையான சட்டங்களில் வழக்குப்பதிவு செய்து அடக்க முனைவது சுதந்திர இந்தியாவுக்கு அழகல்ல என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும்.பொறுப்பான அரசுகள் மக்களின் அச்சம்போக்கி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு முயலாமல் இத்தகைய சட்டங்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆயிரக்கணக்காணோர்மீது பிரயோகிப்பது அதிகார துர்ப்பிரயோகம் என்றே கருதப்பட வேண்டும்.



அரசு, அநியாயமாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்ட மக்கள்மீது போட்ட தேச விரோத வழக்குகளை உடன் திரும்பப் பெறட்டும்


- இந்நேரம் . காம்