சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு - இனி என்ன நடக்கும்?

வால்மார்ட்டும், டெஸ்கோவும் வந்தால் இந்தியாவில் என்ன நடக்கும்?
1. விவசாய விளை பொருட்கள், விவசாயிகள் லாபமடையும் வகையில் கொள்முதல் செய்யப்படும்.
2. அதே நேரத்தில், அடக்க விலைக்கும் குறைவாகவே உபயோகிப்பாளர்களுக்கு விற்கப்படும்.
3. இதனால், விவசாயிகள் ஆர்வத்துடன் இவர்களுக்கு சப்ளை செய்வார்கள். நுகர்வோரும் இவர்களிடமே பொருட்களை வாங்குவார்கள்.
4. சில காலம் இதே நிலை தொடரும். இவர்களுடன் போட்டி போட்டு நஷ்டத்தில் தொழில் செய்ய முடியாமல் சிறு வணிகர்கள் தொழிலை விட்டு விட்டு மாற்று வேலையை தேடி செல்ல வேண்டியிருக்கும்.
5. ஒட்டு மொத்த சிறு வணிகர்களும் அழிந்த பின், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இவர்களை தவிர வேறு யாருக்கும் விற்க முடியாது என்ற நிலை ஏற்படும். அதை போலவே நுகர்வோர்களுக்கும் இவர்களை விட்டால் நாதியில்லை என்ற நிலை ஏற்படும்.
6. இந்நிலை ஏற்படும் வரை பொறுமையாக நஷ்டத்தில் வியாபாரம் செய்து விட்டு, விவசாயிகளிடம் அடி மாட்டு விலைக்கு கொள்முதல் செய்ய ஆரம்பிப்பார்கள். இவர்களை தவிர வேறு யாரும் வாங்க இல்லாததால், இவர்களிடமே பொருட்களை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
7. போட்டி விற்பனையாளர்கள் இல்லை என்பதால், தாங்கள் வைத்தது தான் விலை என்ற நிலையில் அதிக விலை கொடுத்து பொருட்களை `நுகர்வோர் வாங்கியே தீர வேண்டும்.
ஆக, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு மூலம் பலனடைய போவது வெளிநாட்டு நிறுவனங்களும், அவர்களிடம் லஞ்சம் அல்லது கட்சி நிதி பெறும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமே!
அதோடு, இந்நிறுவனங்களுக்கு வரி சலுகை வழங்கி மேலும் அரசுக்கு நஷ்டம் ஏற்படும். இதில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு நடை முறையில் உள்ள தொழிலாளர் நல சட்டத்திலிருந்தும் விதி விலக்கு அளிக்கப்படும்.
ஆக மொத்தத்தில் இம்முடிவு நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதை அமுல்படுத்தியே தீருவேன் என ஒற்றைக்காலில் நிற்கும் மன்மோஹன் சிங் ஒரு ஏட்டு சுறைக்காய். ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளே வாழ்க்கையை நடத்தும் அவருக்கு இன்றைய இந்தியாவிற்கு எது தேவை என்பதை உணரும் சக்தி இல்லை. மேலும் இவரும் சரி, வணிக துறை அமைச்சரும் சரி, யாருமே தேர்தலில் நின்று ஜெயித்து வந்தவர்கள் அல்ல! அந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள்.
வெளிநாட்டவரின் நேரடி முதலீட்டின் மூலம் தான் இந்தியாவின் பொருளாதாரம் கொழிக்கும் என்றால் மகாத்மா காந்தி வெள்ளைக்காரனை இந்தியாவிலிருந்து விரட்ட போராடியது முட்டாள் தனம். வெள்ளைக்காரனும் இதைத்தானே செய்தான்?
கழுதைக்கு வாக்குப்பட்டால் உதைக்கு பயப்படலாமா?
போகிற போக்கை பார்த்தால், வெகு சீக்கிரத்தில் பாராளுமன்றத்திலும் 51% சதவிகிதம் வெளி நாட்டவர் பங்கேற்க சட்டம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட தேவை இல்லை