பொங்குக... தமிழுணர்வுப் பொங்கல்..!


இவர்கள் "சேற்றில்" கை வைத்தால்தான் நாம் "சோற்றில்" கை வைக்க முடியும். யார் இவர்கள்? உழவர் பெருமக்கள். உழவர்கள் - தமிழர்கள்; அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள் தான்... பொங்கல் பண்டிகை. இந்தத் தமிழர் திருநாள்... பொங்கல் திருநாள்... உலகெங்கும் உள்ள தமிழர்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்.

இது இந்துக்கள் பண்டிகை, கிறிஸ்தவர்கள் பண்டிகை அல்லது முஸ்லிம் பண்டிகை என்று சொல்லாமல் தமிழர் திருநாள் என்கிறோம்.


நஞ்செய், புஞ்செய் நிலங்களானாலும் சரி, வானம் பார்த்து மழைக்குக் கதறும் பூமியானாலும் சரி, இராப்பகலாக உழைத்து உழைப்பின் செல்வம் அறுவடைக்கு வருகிற நாள் "தை" யில்தான்! .


உழுது, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி, கண்ணின் கருமணி போல பாதுகாக்கின்ற உழவனின் இந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால்தான் அவன் மடியும் கனக்கும்; மனமும் நிறைந்திருக்கும்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியே இதனால் ஏற்பட்டதுதானே!
உழைப்பை அறுவடை செய்து செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா!.

 
நெல்மணிகள் முற்றத்தில் பளபளக்க    நிலவழகாய்க் கொத்துமஞ்சள் குலுகுலுக்க
புல்லினத்துச் செங்கரும்பு மடலவிழ   
புதுப்பானை கழுத்ததனில் மலர்இணைய சொல்லரிய இயற்கைத்தாய் புன்சிரிப்பால்    சுழல்பூமி பசுமையாய் விழிபறிக்க மல்லிகையாய்ப் பொங்கியதே வெண்பொங்கல்!    மனப்பானை பொங்கட்டும் மகிழ்வாக!

வாழ்த்துக்களுடன்   
குடந்தை மாவட்ட சங்கம்