வருமானத்தை குறைத்துக் காட்டி மோசடி: வோடபோன் நிறுவனத்துக்கு ரூ. 1,263 கோடி அபராதம்

 
டெல்லி: வருவாயைக் குறைத்துக் காட்டிய வோடபோன் மொபைல் நிறுவனத்துக்கு ரூ. 1,263 கோடி அபராதம் விதித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2008-09 மற்றும் 2010-11 ஆண்டுகளில் இந்த நிறுவனம் தான் ஈட்டிய வருவாயைக் குறைத்துக் காட்டி குறைவான வரியைக் கட்டியுள்ளது. இதையடுத்து 2008-09ம் ஆண்டுக்கு ரூ. 715 கோடியும், 2010-11ம் ஆண்டுக்கு ரூ. 548 கோடியும் அபராதம் விதித்துள்ளது தொலைத் தொடர்புத்துறை.
ஈட்டிய வருவாய், அன்னிய செலாவணி மூலம் கிடைத்த வருவாய், வட்டி மூலம் கிடைத்த வருவாய் ஆகியவற்றை இந்த நிறுவனம் குறைத்துக் காட்டியுள்ளது. இதையடுத்து 15 நாட்களில் ரூ. 1,263 கோடி அபராதத்தைக் கட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் சைனா மொபைல் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக உலகின் 2வது மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாகும். voice data fone என்பதன் சுருக்கமே வோடபோன். இந்த நிறுவனத்தின் Zoozoo விளம்பரங்கள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும்.