என்.எல்.சி தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்த நோட்டீஸ்


நெய்வேலி என்.எல்.சி நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை கைவிடக் கோரி நடத்தப்படும் வேலை நிறுத்த நோட்டீஸை நிர்வாகத்திடம் நாளை (25.06.13) தொழிற்சங்கங்கள் அளிக்க உள்ளன.

என்.எல்.சி பங்கு விற்பனை தொடர்பாக நெய்வேலியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் தொ.மு.ச. கூட்ட அலுவலகத்தில் இன்று (24.06.13) நடைபெற்றது. இதில், அனைத்து அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களும், பொறியாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் முடிவைக் கைவிட வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

முதலில் கறுப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்கு செல்வது, துண்டு பிரசுரம் அளிப்பது எனவும், உண்ணாவிரத போராட்டத்திற்கு பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், பொறியாளர் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள், தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராடுவதில் தயக்கம் இருப்பதாகவும், மீண்டும் இன்று மாலை பொறியாளர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூடி ஆலோசித்த பின்னர் தங்களது முடிவை அறிவிப்பதாக தொழிற்சங்க உறுப்பினர்கள் கூறினர்.

எனவே என்.எல்.சி தொழிற்சங்கங்கள் இன்று நிர்வாகத்திடம் அளிக்க இருந்த வேலை நிறுத்த நோட்டீஸை நாளை (25.06.13) அளிப்பதாக தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன