பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். சீரமைப்பு குறித்து விவாதிக்க மத்திய அமைச்சர் குழு

நஷ்டத்தில் இயங்கிவரும் அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவற்றின் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் குழு ஜூன் 11-ஆம் தேதி விவாதிக்க உள்ளது.
புது தில்லியில் இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: நடப்பு நிதி ஆண்டில் பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் நிறுவனத்தின் (பி.எஸ்.என்.எல்.) இழப்பு ரூ. 8,198 கோடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மற்றொரு அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான மஹா
நகர் டெலிபோன் நிகம் நிறுவனத்தின் (எம்.டி.என்.எல்.) நஷ்டம் ரூ. 3,300 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்களை நிதி நிலையை சீரமைத்து மீண்டும் லாபகரமாக இயங்க வைக்க மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் இது குறித்து திட்டமிட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கபில் சிபல், வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி, பிரதமர் அலுவலக துணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் உள்ளனர்.
இவ்விரண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுப்பதற்கான இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. மொபைல் போன் மற்றும் பிற வயர்லெஸ் சேவைகளுக்காக ஏற்கெனவே கூடுதலாக அலைக்கற்றை பெற்றுள்ள இந்நிறுவனங்கள் அதற்காக ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 10,000 கோடியை கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது. மேலும் 4ஜி சேவைகளுக்கான அலைக்கற்றைக்கு இரு நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 13,000 கோடியை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் வசமுள்ள கூடுதல் வயர்லெஸ் பிராட்பேண்ட் அலைக்கற்றையை அரசிடம் திரும்ப ஒப்படைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறும்.
ஊழியர்கள் ஊதியம், விருப்ப ஓய்வுத் திட்டம் ஆகியவை குறித்தும் அமைச்சர் குழு ஆலோசனை நடத்தும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சம் பேருக்கும் எம்.டி.என்.எல். நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கும் விருப்ப ஓய்வு தருவது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைப் பொருத்தவரை, அதன் வருவாயில் 49 சதவீத நிதியை ஊதியத்துக்கு ஒதுக்க வேண்டியுள்ளது. எம்.டி.என்.எல். நிறுவனத்தின் வருவாயில் 103 சதவீத நிதி ஊழியர் ஊதியத்துக்கு ஒதுக்கப்படுகிறது.