12 துறைகளில் அன்னிய நேரடி முதலீடு வரம்பு அதிகரிப்பு


தொலைத் தொடர்பு, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 12 துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
புது தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்புகள் குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெற்றது. அப்போது எடுத்த முடிவுகள் குறித்து மத்திய வர்த்தக-தொழிலக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியது:
தொலைத் தொடர்புத் துறையில் தற்போதுள்ள 74 சதவீத அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு, 100 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 49 சதவீத அளவிலான முதலீட்டை அரசின் முன் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்கள் பெறலாம்.
பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தற்போதுள்ள 26 சதவீத உச்ச வரம்பு தொடரும். எனினும், நவீனமயமான தயாரிப்புத் திட்டங்கள் தொடர்பாக, ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித் தனியாக பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்கும்.
காப்பீட்டுத் துறையில் 26 சதவீத அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. விமான போக்குவரத்து துறையில் தற்போதுள்ள 49 சதவீத வரம்பு தொடரும். விமான நிலையங்கள், மீடியா, மருந்து தயாரிப்பு, சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளில் அன்னிய நேரடி முதலீடுகள் குறித்து புதிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.