கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிட தடை:வழக்கு தொடர்ந்து போராடிய 85 வயது வக்கீலுக்கு தங்க பதக்கம்


திரிசூர் : குற்றவழக்கில் தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்படும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு காரணமான வழக்கை தொடர்ந்த 85 வயது கேரள பெண் வக்கீலுக்கு தங்க பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, திரிசூர் இந்தியன் சீனியர் சேம்பர் தலைவர் ஜேம்ஸ் வாளப்பிலா, துணை தலைவர் ஜான் ஆலுக்கா, செயலா ளர் ஜியோ காட்டுக்காரன், அமைப்பாளர் ரஞ்சி ஜான் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் உடனடியாக தகுதியிழக்கிறார்கள். அவர்களின் பதவி பறிக்கப்படும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு கூறியது. தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என அதில் கூறப்பட்டது.

85 வயது கேரள வக்கீல் லில்லி தாமஸ் மற்றும் லோக் பிரஹரி நிறுவனம் தொடர்ந்த அப்பீல் வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை கூறியுள்ளது. வக்கீல் லில்லி தாமஸ், மறைந்த வக்கீல் கே.டி. தாமஸ் மகள். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெயர் பெற்றவர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த வக்கீல் லில்லி தாமசுக்கு திரிசூர் இந்தியன் சீனியர் சேம்பர் சார்பில் தங்கபதக்கம் அறிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்த பதக்கம் அவருக்கு வழங்கப்படும்.