ஊடகத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு

ஊடகத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்ச வரம்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஊடகத் துறையில் 26 சதவீதமாக உள்ள அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஊடகத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டை மேலும் அதிகரிப்பது தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுப்பதாகிவிடும். நாளிதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள் உள்ளட்டவை அரசியல், உள்நாட்டு நிகழ்வுகள் என பல்வேறு செய்திகளை மக்களுக்கு தெரிவிப்பவையாக உள்ளன. இவற்றில் அன்னிய நிறுவனங்கள் அதிகம் அனுமதிக்கப்படும் போது, அவர்கள் தங்களுக்குச் சாதகமாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துவிடும். அரசு முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, அது தங்கள் நாட்டுக்குச் சாதகமாக அமையாவிட்டால், அதனை எதிர்த்து செய்திகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.
மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பான ஊடகத்துறையில் அன்னிய நிறுவனங்கள் ஆதிக்கம் ஏற்பட்டால் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் வகையில் அவர்கள் செயல்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உள்துறை அமைச்சகம் இவ்வளவு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததால்தான், அன்னிய நேரடி முதலீடு உச்ச வரம்பு தொடர்பாக ஜூலை 16-ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் ஊடகத் துறைக்கான உச்ச வரம்பு அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்படவில்லை