ரிலையன்ஸ் ஜியோ சேவையை நிறுத்த வேண்டும்: தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு புகார்

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் விதிமுறைகளை புறக்கணித்து முழுமையான சேவை அளிக்க உள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (COAI) தொலைத் தொடர்பு துறைக்கு புகார் அளித்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் 4 ஜி சேவையை நாடு முழுவதும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது.
ஆர் ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு விதிமுறைகளை புறக்கணித்து திடீரென 15 லட்சம் பயனாளிகளுக்கு சோதனை சேவை என்கிற பெயரில் முழுமையான சேவையை வழங்க வருகிறது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது.
ஆகஸ்ட் 8 ஆம் தேதியிட்ட இந்த கடிதம் தொலைத் தொடர்பு துறை செயலர் ஜே எஸ் தீபக்கிற்கு எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளதாவது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் துக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியில் சோதனை முறையிலான சேவையின் போது அதிக எண்ணிக்கையில் இலவச குரல் வழி சேவை மற்றும் தகவல் சேவை வழங்கக்கூடாது என கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் ஆர் ஜியோ நிறுவனம் இந்த கட்டுப்பாடுகளை மீறி தீவிரமாக சலுகைகளை அறிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது சோதனைக்காக அல்ல, சோதனை சேவை என்கிற பெயரில் முழுமையான சேவையில் இறங்குகிறது. இதற்காக ஏற்பாடுகளை செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொது இயக்குநர் ராஜன் மாதேவ்ஸ், இது விதிமுறைகளை மீறு வது மற்றும் தொலைதொடர்பு கொள்கை அம்சங்களை திறமைக்கு ஏற்ப வளைத்துக்கொள்ளும் செய லாகும் என்று கூறியுள்ளார். குறிப் பாக நியாயமான போட்டி போன்ற வற்றை மீறுவதாகும் என்றும் குறிப் பிட்டுள்ளார். இந்த கடிதத்துக்கு முக்கிய தொலைதொடர்பு நிறுவ னங்களான பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த கூட்டமைப்பில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ஒரு உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ நிறுவனம் இந்த மாதத்தில் தனது வர்த்தக ரீதியான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது என்கிற எதிர்பார்ப்பு உள்ளது என அந்த கடிதத்தில் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது தனது 15 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவச குரல்வழி சேவை மற்றும் இலவச டேட்டா சேவையை அளிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சோதனை சேவை என்கிற அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட முழுமையான வர்த்தக சேவையை இந்த மாதத்தில் தொடங்க உள்ளது.
ஜியோ நிறுவனம் தற்போது சோதனை அடிப்படையில் 20 எல்வொய்எப் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும், 14 சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் மூன்று மாதங்களுக்கு எல்லையில்லா சேவைகளை வழங்கி வருகிறது. முதலில் இந்த சேவையை தனது பணியாளர்களுக்கு வழங்கியது. அடுத்தடுத்து சில்லரை வாடிக் கையாளர்களுக்கும் கொண்டு வந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்து சேவைகளையும் நிறுத்தி வைக்க வேண்டுமென தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த கடிதத்தில் கேட்டுகொண்டுள்ளன.
உள்நோக்கம் கொண்டது: ஜியோ விளக்கம்
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் கடிதம் உள்நோக்கம் கொண்டது என ஆர் ஜியோ கூறியுள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பின் புகாருக்கு பதிலளித்துள்ள ஆர் ஜியோ, வன்மமான, ஆதாரமற்ற, தவறான தகவல்களுடன் உள்நோக்கமான புகார் என கூறியுள்ளது. ஏற்கெனவே சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் உள்நோக்கத்துடன் இதை ஊதிப் பெருக்குகின்றன என்று கூறியுள்ளது. கூட்டமைப்பு வேண்டுமென்றே தேவையற்ற இழிவுபடுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு எதிராக மட்டும் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்யவில்லை, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்கிறது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கூறியுள்ளது