தனியார் கைத்தொலைபேசி நிறுவனங்களின் பித்தலாட்டம்:நீதிமன்றம் நோட்டீசு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கண்டனூரை சேர்ந்தவர் அருணாச்சலம் என்ற அருண், வழக்கறிஞரான இவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:
இந்தியாவில் 10 க்கும் மேற்பட்ட செல்போன் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கையும், செல்போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. செல்போன் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ், வாய்ஸ் மெயில், 3 ஜி போன்ற சேவைகளை அளித்து வருகின்றன.
இந்த சேவைகளுக்கு ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் பல்வேறு விதமான சலுகைகளை அளித்து வருகிறது. ஆனால் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, நண்பர்கள் தினம், காதலர்கள் தினம் போன்ற பண்டிகை நாட்களில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்களுக்கு செல்போன் நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கிறது. ஏற்கனவே 200 எஸ்.எம்.எஸ் இலவசம் என்ற சலுகையில் இருக்கும் சந்தாதாரர்களிடம் இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று கட்டணம் வசூலிக்கும் செல்போன் நிறுவனங்கள் மீது தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே 31.12.2011 முதல் 1.12.2012 வரை அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் எஸ்.எம்.எஸ்.களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.இந்தமனு நீதிபதிகள் ராஜேசுவரன், விமலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரே நேரில் ஆராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் அனைத்து செல்போன் நிறுவனங்களும் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.