அலைக்கற்றை ஏலம்: அமைச்சர் குழு ஜனவரி 7-இல் முடிவு




2ஜி அலைக்கற்றைக்கான இரண்டாம் கட்ட ஏலம் குறித்து புது தில்லியில் வியாழக்கிழமை கூடிய அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர் குழு முடிவு எதுவும் எடுக்காததால், ஜனவரி 7-ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த உரிமங்களுக்கான முதல் கட்ட ஏலம் நவம்பர் மாதம் நடைபெற்றது. அடுத்த கட்ட ஏலம் குறித்து முடிவு எடுக்க தொலைத் தொடர்பு விவகாரங்களுக்கான அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு வியாழக்கிழமை புது தில்லியில் ஆலோசனை நடத்தியது. 1800 மெகாஹர்ட்ஸ் அலைக்கற்றைக்கும் உயர் ரக 900 மெகாஹர்ட்ஸ் அலைக்கற்றைக்கும் இரண்டாம் கட்ட ஏலம் நடத்த மத்திய அமைச்சரவை முறைப்படி அனுமதியளித்ததைத் தொடர்ந்து, தொலைத் தொடர்புத் துறை ஏல நடவடிக்கைகள் குறித்து தயாரித்த திட்டம் பற்றி இந்தக் குழு ஆலோசனை நடத்தியது. ஆனால் கூட்டத்தில் இறுதி முடிவெதுவும் எடுக்கப்படவில்லை.
900மெகாஹர்ட்ஸ் உயர் ரக அலைக்கற்றை விற்பனை மூலம் ரூ.25 ஆயிரத்து 316 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முந்தைய ஏலத்தில் விற்பனையாகாத 1800 மெகாஹர்ட்ஸ் அலைக்கற்றையை இரண்டாம் கட்ட ஏலத்தில் விற்பதன் மூலம் ரூ. 14 ஆயிரத்து 579 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் கட்ட ஏலத்தில், 10 மெகாஹர்ட்ஸ் அலைக்கற்றையை 8 பிராந்தியங்களுக்குப் பிரித்து, ஒவ்வொரு பிராந்தியத்திலும் 1.25 மெகாஹர்ட்ஸ் அலைக்கற்றைக்கு ஏலம் நடைபெற்றது. ஆனால் இதற்குப் போதிய வரவேற்பு இருக்கவில்லை. இம்முறை ஏலம் நடைபெறும்போது, தில்லி பிராந்தியத்துக்கு குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 970.30 கோடி இருக்கவேண்டுமென முடிவாகியுள்ளது. மும்பை பிராந்தியத்துக்கு குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 949.84 கோடியென முடிவாகியிருக்கிறது. மொத்தத்தில் ரூ.39 ஆயிரத்து 895 கோடியைத் திரட்டுவது மத்திய அரசின் திட்டமாகும். உரிமங்கள் ரத்தாகியுள்ளபோதிலும் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் இம்மாதம் 18-ஆம் தேதி வரை தங்களது சேவைகளைத் தொடர்ந்து வழங்கலாம்.