வெண்கல குரல் ஓய்ந்தது ...!பாட்டும் நானே பாவமும் நானே: டி.எம்.எஸ்

T M சௌந்தர்ராஜன் இசையில் கலந்தார்
அஞ்சலி

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91.
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சௌந்தரராஜன் இன்று மதியம், சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.
மதுரையில், 1923ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி மீனாட்சி ஐயங்காரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். 1950ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி பாடல் மூலமாக சௌந்தரராஜன் தமிழ் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.
அதன்பிறகு தொடர்ந்து அவரது இனிய குரலால் பல்வேறு திரைப்பட பாடல்களைப் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
தமிழில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். இது தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.