இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையே கடந்த 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இணக்கமான தீர்வு ஏற்பட்டு அது முடிவுக்கு வந்துவிட்டது. அதன்படி கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மீனவர் பேரவை தலைவரான பீட்டர் ராயன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால் மற்றும் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோரின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் பராம்பரிய உரிமைகளான கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் கோவிலின் ஆண்டு விழாவுக்கு செல்ல மட்டுமே இந்திய மீனவர்களுக்கு உரிமையுள்ளதாக உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாக கூறுவதே தவறு எனவும், 1974 ஆம் ஆண்டில் பாக் ஜலசந்தியிலிருந்து ஆடம் பாலத்திற்கு எல்லை மாற்றப்படுவது குறித்து இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின் படியே கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதாக அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட பின் நடந்த விவாதத்தின் முடிவில் வரும் ஜனவரி 27ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.