புது தில்லியில் நடைபெற்றுவரும் அலைக்கற்றை ஏலத்தில் 5-வது நாளான வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 33 சுற்றுகள் முடிந்துள்ளன என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
அலைக்கற்றைக்கான ஏலம் பிப்ரவரி 3-ஆம் தொடங்கியது. ஏலத்தின்போது, சராசரியாக ஒரு மெகா ஹேர்ட்ஸýக்கு 1 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் விலை கேட்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. நான்காம் நாளான வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக மொத்தம் ரூ. 52,689 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இதுவரை அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் (கிழக்கு) உத்தர பிரதேசம் (மேற்கு) ஆகிய தொலைத்தொடர்பு வட்டங்களுக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன என தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தில்லி தொலைத்தொடர்பு வட்டத்தில் 900 மெகா ஹேர்ட்ஸ் மற்றும் 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைப் பிரிவுகளுக்கு அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
தில்லியில் 900 மெகா ஹேர்ட்ஸ் அலைவரிசைப் பிரிவுக்கான ஏல விலை 78 சதவீதம் வரை அதிகரித்தது. சராசரியாக ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மெகா ஹேர்ட்ஸýக்கு ஒரு சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஏலத் தொகை அதிகரித்தது. 1800 மெகா ஹேர்ட்ஸ் அலைக்கற்றையின் ஏல விருப்பத் தொகையானது, சுற்றுக்கு சராசரியாக 5 சதவீதம் அதிகரித்தது.
அலைக்கற்றை ஏலம் பிப்ரவரி 3-ஆம் தேதி துவங்கியது. 4-ஆம் நாளான வியாழக்கிழமை ரூ. 52,689 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1800 மெகா ஹேர்ட்ஸ் அலைவரிசைப் பிரிவில் அரசுக்கு ஏல முன்பணமாக ரூ. 30,754 கோடி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் முடிவதற்கு இறுதி நாள் குறிப்பிடப்படவில்லை.
பார்தி ஏர்டெல், டாடா டெலிசர்வீஸஸ், வோடஃபோன், ஐடியா, ஏர்செல், டெலிவிங்ஸ் (டெலிநார்), அனில் அம்பானியின் ரிலையன்ஸ், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுவருகின்றன.