புதுடில்லி: டில்லி சட்டசபையில் ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவது தோல்வியடைந்ததை தொடர்ந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி துணைநிலை கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.
மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் கவர்னரின் எதிர்ப்பையும் மீறி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முயற்சி செய்தார். இதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,எம்.எல்.ஏ.,க்கள் கடுடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மசோதாவை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து ஓட்டெடுப்பு நடந்தது. இதில் மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 42 ஓட்டுக்கள் விழுந்தன. ஆதரவாக 27 ஓட்டுக்கள் விழுந்தன. இதனையடுத்து மசோதா தாக்கல் செய்வது தோல்வியில் முடிந்தது.
மசோதா தாக்கல் செய்வது தோல்வியில் முடிந்ததால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை எந்நேரத்திலும் ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக ஆம் ஆத்மியின் யோகேந்திர யாதவ் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்பதை நிராகரிக்க முடியாது. அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்த பின் ராஜினாமா செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார். ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் டில்லியின் அனுமன் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் டில்லி சட்டசபையில் கெஜ்ரிவால் பேசுகையில்,சில அமைச்சர்களின் செயல்பாடுகள் கவலையை ஏற்படுத்துகிறது. நேற்று சட்டசபையில் ஏற்பட்ட ரகளைக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். ஆவணங்கள் கிழிக்கப்பட்டதும், மைக்குகள் உடைக்கப்பட்டதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போதிய அனுபவமில்லாத நாங்கள் உரிய பாடம் கற்றுக்கொண்டோம். அவையில் பேசுவதற்கு கூட எதிர்க்கட்சிகள் அனுமதி மறுக்கின்றன.ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. அம்பானியை காப்பாற்றுவதற்காக டில்லி அரசுக்கு எதிராக காங்கிரசும், பா.ஜ.,வும் இணைந்து சதி செய்கின்றன. மத்திய அரசுக்கு தலைவணங்க மாட்டேன். டில்லி சட்டசபையின் கடைசி கூட்டத்தொடராக இதுவாக இருக்கும் . மத்திய அரசின் தவறான வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அம்பானி மீது வழக்கு பதிவு செய்ததால், ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்வது தோல்வியடைய செய்யப்பட்டுள்ளது என கூறினார். இதன் பின்னர் டில்லி சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் பின்னர் கெஜ்ரிவால், தலைமைச்செயலகத்தில் தனது அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது ராஜினாமா கடிதத்தை எழுதியதாக தகவல்கள் வெளியாகின.
இதனைதொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர், டில்லி துணை நிலை கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.மேலும் டில்லி சட்டசபையை கலைக்கவும் பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து, டில்லியில் 49 நாள் ஆம் ஆத்மியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
ராஜினாமா ஏன்?:
டில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து கட்சி அலுவலகத்தில் விளக்கமளித்த அரவிந்த கெஜ்ரிவால், நமது முதல் இலக்கு ஜன்லோக்பால் மசேதாவை நிறைவேற்றுவதாக இருந்தது. இதற்காக எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தோம். ஆனால் பா.ஜ.,வும் காங்கிரசும் இணைந்து சதி செய்தன. மசோதாவை ஆதரிக்காமல் இரு கட்சிகளும் தடை ஏற்படுத்தின. முகேஷ் அம்பானிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ததால் பா.ஜ.,வும் காங்கிரசும் அதிருப்தியடைந்தன. தன் சொல்பேச்சு கேட்கும் அரசையே அம்பானி விரும்பினார். ஜன்லோக்பால் மசோதா சட்டமானால் பல தலைவர்கள் சிறை செல்வார்கள். ஜன்லோக்பால் மசோதாவுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளோம். முறைகேடு செய்த நிறுவனங்கள் குறித்து சி.ஏ.ஜ., ஆய்வுக்கு உத்தரவிட்டோம். சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் என்னை காயப்படுத்தின. சிறந்த நிர்வாகம் என்பது தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்புவது. ஷீலா தீக்சித் மீது புகார் செய்தோம். அம்பானி மீது வழக்குப்பதிவு செய்தோம். டில்லி துணை நிலை கவர்னர் தன்னை வைஸ்ராய் என நினைத்து கொண்டுளளார். கவர்னரின் சர்வாதிகரத்தனமான உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுத்தோம். டில்லியில் புதிதாக மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என விரும்புகிறோம் என கூறினார்