ஊதிய உயர்வை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக பொதுத்துறை வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இது குறித்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.வி. முரளி கூறுகையில், "தொழிலாளர் நல தலைமை ஆணையர் முன்னிலையில் கடந்த 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கி ஊழியர்களின் கோரிக்கையான 10 சதவீத ஊதிய உயர்வுக்கு இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) சம்மதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தேசிய அளவிலான 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு எடுத்துள்ளோம்' என்று தெரிவித்தார்.
எனினும், தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி மற்றும் ஏக்சிஸ் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 18-ம் தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளின் 55 ஆயிரம் கிளைகளில் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.