​ஃபாசிஸ மோடியின் அடையாளம் அன்ஸாரி-மோச்சி!

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மாநில முதல்வர் மோடியின் ஒப்புதலோடு சங்பரிவாரம் தலைமையில் நடத்தப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையின் அடையாளமாக உலக மக்களிடையே நீங்கா இடம் பெற்ற இரு புகைப்படங்கள் பிரசித்தமானவை!
ஒன்று, கொலை செய்யும் வெறியுடன் பாய்ந்துவரும் சங்பரிவார பயங்கரவாதிகளிடம் தம்மை விட்டுவிடுமாறு கண்களில் மரண பயத்தோடு கண்ணீருடன் கைகூப்பி கெஞ்சும் தையல் தொழிலாளியான குத்புதீன் அன்ஸாரியின் புகைப்படம்!
மற்றொன்று, முஸ்லிம்களைக் கொன்றொழிக்க கையில் வாள் மற்றும் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷ வெறியுடன் பாயும் செருப்பு தைக்கும் தொழிலாளியான அஷோக் மோச்சியின் புகைப்படம்!
இந்த இருவரும் நேரில் சந்தித்து கொண்டால் எப்படியிருக்கும்? "தப்பியோடிய இரை வேட்டைக்காரன் கையில் மீண்டும் கிடைத்தால் கசாப்புதான்!"
ஆனால், அதற்கு மாற்றமாக வேட்டைக்காரனும் இரையும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி அன்பு பரிமாறிக்கொள்வது என்பது? சாத்தியமே இல்லை என்று நினைப்பவர்களுக்காக....இதோ!
சுமார் 18 அமைப்புகள் இணைந்து கேரள மாநிலம் தளிப்பரம்பு எனுமிடத்தில் "இனப்படுகொலையின் 12 ஆண்டுகள்" என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கம் ஒன்றில் இந்த இரு எதிர் துருவங்கள் கலந்துகொண்டதோடு, ஒருவருக்கொருவர் ரோஜாப்பூ கொடுத்து கட்டித் தழுவிக்கொண்டனர்!
இக்கருத்தரங்கில் பேசிய மோச்சி, சங்பரிவாரம் தம்மைப் பயன்படுத்திக் கொண்டதையும் சங்பரிவாரத்தின் சூழ்ச்சிக்குத் தாம் பலியாகிவிட்டிருந்ததையும் நினைவுகூர்ந்தார்.
மேலும், "என்ன செய்கிறோம் என்ற உணராமலேயே வெறுப்பு ஊட்டப்பட்ட நிலையில் அநியாயம் செய்தேன். இனப்படுகொலை ஏற்படுத்திய வேதனையில் கடந்த 12 ஆண்டுகளாக நான் யாருக்கும் வாக்களிக்கவில்லை. கலவரத்தில் என்னைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாகவே ஓட்டளிப்பதை நிறுத்தினேன். கலவரம் நடந்த காலத்தில் நான் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்தேன். இப்போதும் அதே தெருவில் அதே தொழிலையே செய்துவருகிறேன். எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக கலவரத்தின் அடையாளமாக மாறிப்போனேன். நான் இப்போது காந்தியின் குஜராத்திலிருந்து வருகிறேன்; மோடியின் குஜராத்திலிருந்தல்ல! இப்போது குஜராத் அமைதியாக இருக்கிறது. இந்த அமைதி, மோடியைப் பிரதமர் நாற்காலிக்குக் கொண்டு செல்வதற்கான தற்காலிக அமைதி மட்டும்தான்! இனி மேலாவது நாம் வெறுப்பின் அரசியலை நிறுத்தியே தீரவேண்டும். நான் செய்த அநியாயத்திலிருந்து இனியாவது எனக்கு விடுதலை வேண்டும்.
பொருளாதார பிரச்சனை காரணமாக திருமணம் முடிக்கவும் இயலவில்லை. இனிமேலும் முடியும் எனத் தோன்றவில்லை. இதுதான் இன்றைய குஜராத்தில் என்னைப் போலுள்ளவர்களின் நிலைமை. மனிதனை நேசிக்காத எந்த மதத்தையும் நான் நம்பவில்லை" என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
குத்புதீன் அன்ஸாரி பேசும்போது, "மதச்சார்பின்மை குறித்து பேசுபவர்களுடன் மட்டுமே இனி நான் பேசுவேன். இங்கு நான் வந்தபோது 200 க்கு மேற்பட்டோர் என்னைக் காண நேரில் வந்தனர். அவர்களில் இந்து யார் முஸ்லிம் யார் என எனக்குத் தெரியாது. இது ஒரு மாற்றத்தின் துவக்கமாக அமையட்டும். குஜராத் இன்று அமைதியாக உள்ளது. காரணம், மோடி பிரதமராக துடிப்பதே. வளர்ச்சியின் மந்திரங்களை அவர் கட்டவிழ்த்து விடுகிறார். அவ்வாறு குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் எனது மாநிலத்தவரான அசோக் மோச்சிக்கு செருப்பு தைத்து, பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்குமா? 12 ஆண்டுகளாக தெருவிலேயே வாழும் மோச்சியிடம் எனக்கு கோபமேதுமில்லை.
குஜராத்தில் ஒன்றாக இருக்க முடியாத என்னையும் மோச்சியையும் ஒரு இடத்தில் உட்கார வைத்தது கேரளாதான். அதற்காக கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மனிதத்தன்மை காட்டாமல் குர்'ஆனும் கீதையும் வாசிப்பதால் மட்டும் எந்தப் பிரயோஜனமும் இல்லையென நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
இவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், "நான் குத்புதீன் அன்ஸாரி" என்ற புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர், குஜராத் இனப்படுகொலையின் அடையாளங்கள் இரண்டும் ஓரிடத்தில் ஒன்றிணைந்து ஃபாசிஸ சங்பரிவாரத்துக்கும் மோடிக்கும் மரண அடி கொடுத்துள்ளன என்றால் மிகையாகாது!
ஊடகங்கள் அனைத்தையும் விலைகொடுத்து குத்தகைக்கு எடுத்து எத்தனைப் பொய்க் கருத்து கணிப்புகள், ரேம்போ விளம்பரங்கள் வெளியிட்டாலும் குஜராத்தின் யதார்த்த அவல நிலையை மறைத்து முன்னேற்றமடைந்த குஜராத் என எவ்வளவுதான் பொய்ப் பரப்பினாலும் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகள் என 2000 க்கு மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களைக் கர்ணக்கொடூரமாக கொன்றொழித்த மோடியின் மீதான இரத்தக்கறை காய்ந்துவிடாமல் தடுப்பதில் இவ்விரு அடையாளங்களும் யுகக்காலம் முழுவதும் சாட்சியாக உலகின் முன் நிற்கும்!
2000 க்கு மேற்பட்ட அப்பாவிகளின் இரத்தத்தினைத் தம்மீது பூசிக்கொண்டுள்ள மோடி, கார்ப்பரேட்டுகளின் உதவியுடன் எவ்வளவு பொய்ப் பித்தலாட்டம் வேண்டுமானாலும் நடத்தி இந்தியாவின் பிரதமரென்ன.... அமெரிக்காவின் ஜனாதிபதியே ஆகட்டும்! ஆனாலும் ஃபாசிஸ சங்பரிவாரத்தின் பிரதிநிதியாக நின்று நடத்திய நரவேட்டையின் இத்தகைய அடையாளங்கள் காலா காலத்துக்கும் மோடியை விரட்டிக்கொண்டேயிருக்கும்!