தரைவழித் தொடர்பு சேவை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.14,979 கோடி நஷ்டம்


கடந்த 2013-14ஆம் நிதியாண்டில் தரைவழித் தொடர்பு (லேண்ட்லைன்) சேவை மேற்கொண்டதில் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ரூ.14,979 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. மேலும், இந் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ.7,085 கோடி என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தரைவழித் தொடர்பு சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இந் நிறுவனம், கடந்த நிதியாண்டில் தரைவழித் தொடர்பு சேவை மேற்கொண்டதில் ரூ.14,979 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. மேலும், இந் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ.7,085 கோடி என்றும், இத் தொகையானது தணிக்கை செய்யப்படாதது, தாற்காலிகமானது என்றும் மத்திய அமைச்சர் எழுத்து மூலம் அளித்த பதில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந் நிறுவனத்தின் நிகர நஷ்டம் 2012-13ஆம் நிதியாண்டில் ரூ.7,884 கோடியாகவும், 2011-12இல் ரூ.8,851 கோடியாகவும் இருந்தது. மேலும், தரைவழித் தொடர்பு சேவை மூலம் 2012-13ஆம் நிதியாண்டில் நஷ்டம் ரூ.13,445 கோடியாகவும், 2011-12இல் ரூ.12,669 கோடியாகவும் இருந்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2014 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, பி.எஸ்.என்.எல். நிறுவனம் நிலம் மற்றும் கட்டட வகைகளில் ரூ.5,528.65 கோடி சொத்து மதிப்பைக் கொண்டுள்ளது என்று மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.