"அடுத்த ஆண்டு பி.எஸ்.என்.எல். - எம்.டி.என்.எல். இணைப்பு நடைபெறும்'

பொதுத் துறையைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றின் இணைப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவேறும் என்று பி.எஸ்.என்.எல். மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புது தில்லி, மும்பை ஆகிய இரு இடங்களில் எம்.டி.என்.எல். நிறுவனம் சேவை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சேவை வழங்கி வருகிறது.
இந்நிலையில், இரு நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக நாடு முழுவதும் சேவை வழங்குவதன் மூலம் லாபகரமாகச் செயல்பட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மொபைல்போன் வாடிக்கையாளர் பிரிவு இயக்குநர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா புது தில்லியில் கூறினார். அவர் மேலும் கூறியது:
இரு நிறுவனங்களும் இணைவது வணிக ரீதியில் சரியான முடிவாக இருக்கும். வரி செலுத்துதல் கட்டாயம் குறையும் எனக் கூறலாம். தற்போதைய நிலையில், இரு நிறுவனங்களும் பரஸ்பரம் பெற்றுக் கொள்ளும் சேவைகளுக்கு கட்டணம் செலுத்தி வருகின்றன. அந்தக் கட்டணங்கள் மீது இரு நிறுவனங்களும் வரியும் செலுத்துகின்றன. நிறுவனங்களின் இணைப்பு மூலம் இது தவிர்க்கப்படும்.
எனினும் இந்த விவகாரத்தில் சில முக்கிய விஷயங்களைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது.  இரு நிறுவனங்களின் ஊழியர்களின் ஊதியம் மற்றொரு முக்கிய விஷயம். எம்.டி.என்.எல். ஊழியர்கள் கூடுதலாக ஊதியம் பெறுகின்றனர். அந்த நிறுவனம் மீதான கடன்களும் ஒரு முக்கிய பிரச்னையாகும். அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலையில் இரு நிறுவனங்களும் இணைக்கப்படும் என எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜூன் மாத அளவில், இரு நிறுவனங்களின் மொத்த கடன் ரூ. 21,208 கோடியாக உள்ளது. தொலைத் தொடர்பு சந்தையில் பி.எஸ்.என்.எல். பங்கு 12.3 சதவீதமாகவும் எம்.டி.என்.எல். பங்கு 4.83 சதவீதமாகவும் உள்ளது. 2012-2013 நிதி ஆண்டில், பி.எஸ்.என்.எல். ரூ. 8,198 கோடி நஷ்டத்தை சந்தித்தது. அந்த நிதி ஆண்டில் எம்.டி.என்.எல். நிகர அளவில் ரூ. 5,321.12 கோடி இழப்பை சந்தித்தது