தென் மாநிலங்களில் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

தமிழகம், புதுவை உள்பட ஆறு மாநிலங்களில் 1.5 லட்சம் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (டிச.2) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 9 வங்கிகளின் ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில், கடந்த 12-ஆம் தேதி நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் கோரிக்கைகளை இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் ஏற்காத நிலையில், மாநிலங்கள் வாரியாக டிசம்பர் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகம், புதுவை, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
இதே போன்று, தில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் டிசம்பர் 3-ஆம் தேதியும், மேற்கு வங்கம், ஒடிஸா, பிகார், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 4-ஆம் தேதியும், மகாராஷ்டிரம், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 5-ஆம் தேதியும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.
சமரசப் பேச்சு: வங்கி ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மும்பையில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் வங்கி ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகள், இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை (டிச.1) நடைபெறுகிறது. பேச்சில் உடன்பாடு ஏற்பட்டால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்று சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.