நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களை மூட முடிவு: மத்திய அமைச்சர் சித்தேஸ்வர்

நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய கனரக தொழில் துறை இணையமைச்சர் ஜி.எம்.சித்தேஸ்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து கரநாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், ஜகலூர் வட்டம், முஸ்தூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவில் ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், எச்.எம்.டி. வாட்சஸ், திரிவேனி ஸ்ட்ரக்சர்ஸ், துங்கபத்ரா ஸ்டீல் கார்ப்பரேஷன், டையர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
இந்த நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.10,000 கோடி செலவிடுகிறது. சில ஆண்டுகளாக இந்த நிறுவனங்கள் உற்பத்தி எதையும் செய்யாமல் உள்ளன.
எனவே, ஊதியத்துக்காக செலவிடும் பணத்தை மீதப்படுத்தும் நோக்கோடு நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களை தனியார் கூட்டு முயற்சியில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அண்மைக்காலமாக திரிவேனி ஸ்ட்ரக்சர்ஸ், துங்கபத்ரா ஸ்டீல் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் போன்ற நிறுவனங்களில் முன்னேற்றம் தென்படுகிறது. அவற்றை தனியார் கூட்டு முயற்சியில் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் ஆகிய நிறுவனங்கள் மத்திய ராணுவத் துறையின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும்.
நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சுய விருப்பப் பணி ஓய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படுள்ளது.  லாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை-பெங்களூரு மற்றும் மும்பை-பெங்களூரு-தும்கூரு தொழில்தாழ்வாரங்களை அமைப்பதற்காக நிலம் வழங்குமாறு கர்நாடக அரசிடம் கேட்டுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.