ஏர்டெல் மீது அதிக கால் டிராப் புகார்கள் பதிவாகி உள்ளதாக டிராய் தகவல்


செல்போன்களில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அடிக்கடி இணைப்புகள் துண்டிக்கப்படுவது (கால் டிராப்) பெரும்பாலான வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. இதனை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஏற்கனவே அறிவித்திருந்தது. 
கால் டிராப் பிரச்னை குறித்து அதிகரித்து வரும் புகார்கள், அழைப்பு கட்டண உயர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும், நாடு முழுவதும் செல்போன் சேவையை தனியார் நிறுவனங்கள் தரமாக வழங்கி வருகிறதா என்பது குறித்தும் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வந்தது. இதுசம்பந்தமாக, அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களுடன் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. 

இந்நிலையில், இந்த ஆண்டு முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் மீது அதிக அளவிலான கால் டிராப் புகார்கள் வந்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 30-ந்தேதி வரையில் அதிகபட்சமாக ஏர்டெல் மீது 31 புகார்களும், வோடபோன் (17), பி.எஸ்.என்.எல் (10), ரிலையன்ஸ் (8), எம்.டி.எஸ் (2), ஏர்செல் (1) டாடா (1) ஐடியா மீது 10 புகார்களும் பதிவாகியுள்ளதாக டிராய் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதையடுத்து, செல்போன் சேவையை வழங்கும் நிறுவனங்கள் கால் டிராப் அளவை 2 சதவீதத்திற்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.