பொதுத் துறை நிறுவனங்களுக்கு அதிக தன்னாட்சி வழங்க வேண்டும்: மன்மோகன் சிங்


பொதுத் துறை நிறுவனங்களுக்கு அதிக அளவிலான தன்னாட்சியும், அதிகாரிகளின் கட்டுப்பாடுகளில் இருந்து சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து "பிரிக்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த நாடுகளின் வர்த்தக ஒழுங்குமுறை ஆணையங்கள் சார்பில் "வர்த்தகப் போட்டி' தொடர்பான மாநாடு தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
தொழில் வர்த்தக நிறுவனங்களிடையே போட்டியை சமன்செய்யக் கூடிய கொள்கைகளை நமது அரசுககள் பின்பற்ற வேண்டியுள்ளது. அரசானது தனது சட்டம் மற்றும் நிதி அதிகாரங்களைப் பயன்படுத்தி, தனியார் துறையைத் தவிர்த்து பொதுத்துறைக்கு முறையற்ற ஆதாயத்தைத் தராமல் இருப்பது, போட்டி சமநிலைக்கு அவசியம்.
தொழில் நிறுவனப் போட்டிக்கான தீர்வு என்பது பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக அளவிலான தன்னாட்சி வழங்குவதும், அதிகாரிகளின் கட்டுப்பாடுகளில் இருந்து சுதந்திரம் வழங்குவதும்தான். பொதுத்துறை நிறுவனங்கள் அரசுக்குச் சொந்தமானவை என்பதால் அவை நீண்ட காலமாக வர்த்தகப் போட்டியில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பொதுத்துறை நிறுவனங்கள் அதிக அளவிலான போட்டியைச் சந்திப்பது என்பது முக்கியமான பிரச்னையாகும். அரசு ஒரு நிறுவனத்தைச் சொந்தமாக வைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு, போட்டியில் இருந்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்று அர்த்தம் அல்ல.
துரதிருஷ்டவசமாக, இந்த நிறுவனங்கள் அரசுடமையாக இருப்பதாலேயே அதிகாரவர்க்க முடிவெடுக்கும் தன்மை சேர்ந்தே வந்து விடுகிறது. இதன் விளைவாக, இந்த நிறுவனங்களால் சந்தைகளில் போட்டியிட முடியாத தன்மை ஏற்பட்டு விடுகிறது.
சந்தையில் போட்டிக்கு எதிரான அணுகுமுறையானது, ஏழைகளைப் பாதிக்கிறது. எனவே, பொதுக் கொள்கை மூலம் சந்தைகளில் திறன்வாய்ந்த போட்டி உருவாக்கப்பட்டு, அமல்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், சமூக நலவாழ்வுத் திட்டங்களின் முன்னேற்றம் தடைபடும் என்றார் பிரதமர்.
அன்னிய முதலீடுகள்: இந்த மாநாட்டில் மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் சச்சின் பைலட் பேசுகையில், "முதலீடுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன மற்றும் போட்டிச் சந்தைகள் எவ்வாறு உள்ளன என்பதன் அடிப்படையில் அன்னிய முதலீடுகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
அன்னிய முதலீடுகள் போட்டித் திறனை ஊக்குவிக்கின்றன. போட்டித்திறன் கொண்ட சந்தைகள்தான், பொருளாதாரத்தில் பாதகமான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் சக்தி படைத்தவையாக விளங்குகின்றன' என்றார்.