தபால் நிலையத்தில், செல்போன் மூலம் மணியார்டர் அனுப்பும் வசதி!



காரைக்கால்: காரைக்கால் தலைமை தபால் நிலையத்தில் செல்போன் மூலம் மணியார்டர் அனுப்பும் சேவை நேற்று முன்தினம் முதல் துவங்கியது.
காரைக்கால் அம்மையார் கோயில் பின்புறம் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் முதல் செல்போன் மூலம் மணியார்டர்(எம்.எம்.டி.எஸ்) அனுப்பும் புதிய சேவை துவங்கியது. இதன் மூலம், பணம் அனுப்ப விரும்புவோர், தபால் நிலையத்திற்குச் சென்று யாருக்குப் பணம் அனுப்ப வேண்டுமோ அவரது செல்போன் எண், அவரது பெயரைக் கூறி பணத்தை வழங்கவேண்டும். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பயனாளிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பப் படும். அந்த எஸ்.எம்.எஸ்-ல் 6 இலக்க ரகசிய எண் குறிப்பிடப்படும்.
பின்னர், அந்தப் பயனாளி தனது ஊரில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று, தனது செல்போனுக்கு வந்த 6 இலக்க ரகசிய எண்ணைக் குறிப்பிட்டு, செல்போன் எஸ்.எம்.எஸ் செய்தியைக் காட்டவேண்டும். அடுத்த சில நிமிடங்களில் அவர் பணம் பெற்றுகொள்ளலாம். இந்தப் புதிய சேவை மூலம், ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் அனுப்ப முடியும். ரூ.1000 முதல் ரூ.1500 வரை பணம் அனுப்ப கமிஷன் ரூ45, 1501 முதல் ரூ.5 ஆயிரம் வரை ரூ.79 கமிஷனும், ரூ.5001 முதல் ரூ.10,000 வரை ரூ.112 கமிஷனும் வசூலிக்கப்படுகிறது.