2ஜி அலைக்கற்றை ஏலம் துவக்கம்

2ஜி, 3ஜி அலைக்கற்றை: முதல் நாளில் ரூ.60,000 கோடி ஏலம்


2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றை ஏலம் புதன்கிழமை தொடங்கியது. இந்த ஏலத்தின் முதல் நாளிலேயே அனைத்து அலைவரிசைகளிலும் ரூ.60,000 மதிப்பிலான அலைக்கற்றைகள் விற்பனை செய்யப்பட்டன.
900 மெகா ஹெர்ட்ஸ், 1,800 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ் ஆகிய மூன்று அலைவரிசைகளில் ஒட்டுமொத்தமாக 380.75 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கான ஏலத்தை மத்திய அரசு புதன்கிழமை தொடங்கியது.
இது தவிர 2,100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 5 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையும் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாட்டில் உள்ள 22 தொலைதொடர்பு மண்டலங்களில் 17 தொலைதொடர்பு மண்டலங்களுக்கானவை ஆகும்.
மொத்தம் 6 சுற்று ஏலம் நடைபெற்றதாகவும் அதில் ரூ.60,000 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகள் ஏலத்தில் விற்கப்பட்டன.
இந்த அலைக்கற்றை ஏலத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை விலையை வைத்துப் பார்க்கையில், ஒட்டுமொத்தமாக ரூ.82,000 கோடிக்கும் அதிகமாக வருவாய் திரட்ட முடியும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.
ஏலம் விடப்படும் அலைக்கற்றைகளில் பெரும்பாலானவற்றை தற்போது ஏர்டெல், வோடஃபோன், ஐடியா செல்லுலர், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்களே வைத்துள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களின் செல்லிடப்பேசி உள்ளிட்ட சேவைகளைத் தொடர வேண்டுமானால், அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்று அதை விலைக்கு வாங்குவது கட்டாயமாகும். அதன்படி, தற்போதைய ஏலத்தில் 8 தொலைதொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.