தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடன் சுமை ரூ.2.42 லட்சம் கோடி: ரவிசங்கர் பிரசாத் தகவல்


பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கடந்த 2013-14 ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.2.42 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மக்களவையில் புதன்கிழமை கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
கடந்த 2013-14 ஆம் நிதியாண்டில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாங்கியுள்ள மொத்தக் கடனில், பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றின் கடன்கள் முறையே ரூ.4,459 கோடி, ரூ.14,120 கோடி ஆகும். இதே காலகட்டத்தில் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொத்தக் கடன் ரூ.2.24 லட்சம் கோடியாக உள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் கடந்த 2000-01 ஆம் நிதியாண்டில் ரூ.1,066 கோடியாக இருந்த அன்னிய நேரடி முதலீடு, நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ரூ.15,960 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 2013-14 ஆம் நிதியாண்டின் முடிவில், அதாவது 2014 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, 9.24 கோடியாக இருந்த பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்களின் எண்ணிக்கை, கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, 7.81 கோடியாக குறைந்துள்ளது. இருப்பினும், 2011-12 ஆம் நிதியாண்டில் ரூ.8,851 கோடியாக இருந்த இந்த நிறுவனத்தின் நிகர வருவாய் இழப்பு, 2013-14 ஆம் நிதியாண்டில் ரூ.7,020 கோடியாக குறைந்துள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை பயன்படுத்தியதற்காக, டாடா கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் டெலிகாம் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்த நிறுவனத்துக்கு ரூ.1,142.72 கோடி தர வேண்டியுள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.