பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம், புதுவையில் 36 நாட்கள் வீதி நாடக பிரச்சாரம்

அனைத்திந்திய வங்கி அதிகாரி கள் கூட்டமைப்பு சார்பில் ‘பொதுத் துறை நிறுவனங்களை காப்போம்’ என்ற தலைப்பில் பிரச்சார தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் ஒய்.சுதர்சன் பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார். கூட்டமைப்பின் மாநில செயலாளர் பி.விஜயசேனன் ஆவணப் படத்தை வெளியிட்டார். நிகழ்வுக்கு ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் ஏ.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசும்போது, “5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நம்மை ஆள வருபவர்களின் கைகளில் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஒப்படைத்துவிடுகிறோம். 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நம்மிடம் பணம் இல்லை. ‘இரும்பு கொடுங்கள்’ என அமெரிக்காவிடம் பிரதமர் நேரு கையேந்தினார். ஆனால் அவர்கள் கேலி செய்தனர். அடுத்து சோவியத் யூனியனுக்கு நேரு பயணம் சென்றார். அதன் விளைவாகவே பிலாய், ரூர்கேலா, நெய்வேலி ஆலைகள் உள்பட 9 தொழில் வளர்ச்சித் திட்டங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன. ஆனால் இன்று பொதுத்துறை நிறுவனங்களை ஆட்சியாளர்களே ஏலம் போட்டு வருகின்றனர்” என்றார்.
இந்தப் பிரச்சாரம் குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முதுநிலை துணைத் தலைவரும், ஸ்டேட் வங்கி கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான டி.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நம்முடைய வரிப்பணத்தில் உருவான 446 பொதுத்துறை நிறுவனங்கள்தான் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு. ஆனால் அதிக லாபம் ஈட்டக் கூடிய பல பொதுத்துறை நிறுவனங்களை இந்த அரசாங்கமும், முந்தைய அரசாங்கமும் போட்டி போட்டு தனியாருக்கு தாரை வார்த்துவிட்டன. அடுத்ததாக ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பொதுத்துறை இல்லை என்றால் இந்த நாடே சின்னாபின்னமாகிவிடும். எந்த சேவையும் மக்களுக்கு கிடைக்காது.
பொதுத்துறை நிறுவனங் களைக் காக்க குறும்படம் மற்றும் வீதி நாடகங்களை சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்து உருவாக்கியுள்ளோம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 36 நாட்களுக்கு வீதி நாடக பிரச்சாரம் நடைபெறும். அங்கெல்லாம் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றும் திரையிடப்படும். இதுபோல இந்தியா முழுவதும் பிரச்சார இயக்கங்கள் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்