முன்யோசனை இல்லாத முடிவு!

முன்யோசனை இல்லாத முடிவு!

First Published : 18 June 2013 03:13 AM IST
வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் "டெலிகிராம்' அல்லது தந்தி சேவை நிறுத்தப்படும் என்று பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ள முடிவானது, இந்தியாவைப் பொருத்தவரை தேவையற்றது.
 "புதியன புகுதலும் பழைய கழிதலும் வழுவல' என்ற போதிலும், தந்தி சேவைக்கான அவசியங்கள் இன்றளவும் இருக்கும்போது, இந்தச் சேவையை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதுதான் புரியாத புதிர்.
 இந்தியாவில் ஏறக்குறைய அனைவரும் செல்போன் வைத்திருப்பதாலும், தகவல்களைப் பரிமாறிக்கொள்வதாலும் தந்தி கொடுப்போரின் எண்ணிக்கை குறைந்துபோனது என்பது உண்மையே. சமூகத் தேவை வேறு, தொழில் மற்றும் அலுவலகம் சார்ந்த தேவை வேறு என்பதையே பி.எஸ்.என்.எல் புரிந்துகொள்ளவில்லை என்பது வேதனையானது.
 மரணச் செய்தி, பிறந்த நாள் வாழ்த்து, மண நாள் வாழ்த்து போன்ற சமூகத் தேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அத்தகைய இனங்களில் தந்தி கொடுக்கப்படுவது குறைந்துவிட்டது. மரணச் செய்திகள் என்பது உடனடியாக அனைத்து உறவினர்களுக்கும் குறுந்தகவல் மூலமாக, அல்லது பேசிக்கொள்வதன் மூலம் தெரிவிக்கப்பட்டு விடுகிறது.
 ஆனால், வாழ்த்துச் செய்திகளுக்கான சமூகத் தேவை இன்னமும் இருக்கிறது. குறுந்தகவல் மூலம் சொல்லப்படும் வாழ்த்துச் செய்திக்கு மரியாதை கிடையாது. பல நேரங்களில், படிக்காமலேயே அழித்துவிடும் நேர்வுகளே அதிகம். ஆனால்,  பி.எஸ்.என்.எல்லின் வாழ்த்து அட்டையுடன் பிறந்த நாள், மண நாள் வாழ்த்துத் தந்தி ஒரு நபரைச் சென்றடையும்போது அதற்குக் கிடைக்கும் மரியாதை அலாதியானது. அந்த வாழ்த்து, குறுந்தகவல் போல நிமிடத்தில் படித்து அழிக்கப்படுவதில்லை. ஓரிரு நாள்களாகிலும் பாதுகாக்கப்படுகிறது.
 மிகச் சிறந்த வாழ்த்து அட்டையை நுகர்வோரே தேர்வு செய்யவும், அந்த வாழ்த்து அட்டையில் தந்தி வாசகத்தைப் பதிந்து, யாருக்குத் தரப்பட வேண்டுமோ அவரிடம் கொண்டு சேர்ப்பதுமான ஒரு "பிரீமியம் சர்வீஸாக' மாற்றுவதன் மூலம், ஒரு சேவைக்கு - அவர்கள் தேர்வு செய்யும் வாழ்த்து அட்டையின் கம்பீரத்துக்கு ஏற்ப - கட்டணத்தைத் தீர்மானிக்கலாம். ஆனால் அதற்கான எந்த முயற்சிகளையும் செய்யாமல், ஒரு பாரம்பரிய சேவையை கிடப்பில் போடுகிறார்கள்.
 சமூகத் தேவை இவ்வாறு மாறுபட்டதாக, பிரீமியம் சர்வீஸாக மாறிவிட்டாலும், அரசாங்க அலுவல்கள் மற்றும் தொழிற்துறை, நீதிமன்ற நடவடிக்கைகள் சார்ந்த விவகாரங்களில் "தந்தி' தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது.
 இன்றுவரையிலும், நீதிமன்றங்கள் தந்தியை மட்டுமே ஆவணமாக ஏற்கின்றன.  மின்அஞ்சல், குறுந்தகவல் ஆகியவற்றை ஏற்பதில்லை. ஏதோ ஒரு ஊரில் சிறையில் இருக்கும் நபருக்கு அது தொடர்பான வழக்கில், வேறு ஒரு ஊரில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டால், அது தொடர்பான தகவலை சிறை அதிகாரிகளுக்கு தந்தி மூலம்தான் தெரிவிக்க முடியும். குறுந்தகவல் மூலம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவுகளைக் காட்ட முடியாது. மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது.
 தந்தி அலுவலகம் என்பது அரசு நிறுவனம். அங்கிருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு தந்திக்கும் அரசின் முத்திரை இருக்கிறது. ஆகவே அதற்கு "உரிய மரியாதை' கிடைக்கிறது.
 தொழிற்துறை சார்ந்த தேவைகளில், ஒப்பந்தப்புள்ளிகள் தள்ளி வைக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்குத் தந்திகள்தான் அத்தாட்சி பெற்றவையாக இருக்கின்றன. கூரியர், ஸ்பீட்-போஸ்ட், மின்னஞ்சல், குறுந்தகவல் எல்லாமும் இருந்தாலும், தகவல் தெரிவிக்கப்பட்டது என்பதற்கான ஆவணம் தந்தி மட்டுமே.
 தந்திச் சேவையை 24 மணி நேரமும் இல்லாமல் 12 மணி நேரமாகக் குறைத்ததுடன், தந்தி கொண்டு செல்லும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தந்தி ஒரிரு நாள் கழித்துப் போய்ச் சேர்ந்தாலும்கூட, அதன் ஆவணத்தன்மை கருதி அரசு அலுவலகங்களும் தொழிற்துறையும் தந்தியைப் பயன்படுத்தி வருகின்றன.
 சமூகத் தேவையாக இருந்தவரை ஒரு தந்திக்கு ரூ. 3.50 காசுகள் மட்டுமே கட்டணமாக இருந்தது. சமூகத் தேவைக்கு தந்தி பெரிதும் உதவியாக இல்லை என்கின்ற நிலையில், தொழிற்துறை மற்றும் அரசு சார்ந்த தேவைகளுக்கான ஆவணமாக இருப்பதால் அதற்கான கட்டணம் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.27 ஆக உயர்த்தப்பட்டது.
 அண்மையில், பிரதமருக்குத் தந்தி அனுப்பும் போராட்டத்தில் ஒவ்வொரு தந்தி அலுவலகத்திலும் பல ஆயிரம் தந்திகள் அனுப்பப்பட்டன. தந்தி அரசியல் காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. எல்லாரும் கையொப்பம் போட்டு மனு அனுப்புவதைக் காட்டிலும் இவ்வாறு தந்தி கொடுப்பது அரசுக்கு ஒரு நெருக்குதல் தர உதவுவதாகக் கருதுகிறார்கள்.
 இந்தியா முழுவதும் 75 இடங்களில்தான் தந்தி அலுவலகங்கள் உள்ளன. இப்போது இந்த தந்தி அனுப்பும் முறைகள் "வெப்' அடிப்படையில் அமைந்தவை. பெரும் செலவும் கிடையாது. இதை வெறும் ஆவணத்தன்மைக்காக ஒரு பிரீமியம் சர்வீஸ் என்ற அளவில் அதிகக் கட்டணம் நிர்ணயித்து, தொடர்ந்து நடத்துவதுதான் புத்திசாலித்தனம்.
 கைவிடப்பட்ட இந்த தந்தி சேவையை, இந்த நேரத்தில் அஞ்சல்துறை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, தானே இந்தச் சேவையை தொடர்ந்து வழங்கலாம். தற்போது மின் பணஅஞ்சல் வழக்கத்தில் உள்ளதைப் போல, தந்தி சேவையை முழுவதும் தனது கட்டுக்குள் கொண்டுவந்து, தொடரலாம்.
தந்திக்கு இன்றும் தேவை இருக்கிறது!