பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். சீரமைப்பு: நாளை மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்


பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றின் சீரமைப்பு குறித்து திட்டமிட அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை (ஜூன் 12) கூடவிருக்கிறது.
புது தில்லியில் இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தது: பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அந்நிறுவனங்களை சீரமைப்பது குறித்து தீர்மானிப்பதற்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நீண்ட கால அடிப்படையில், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை இந்தக் குழு ஆராயவுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களை மீண்டும் சிறப்பாக செயல்பட வைக்கவும் இந்தக் குழு ஆலோசனைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2012-2013 நிதி ஆண்டில் எம்.டி.என்.எல். நிறுவனம் ரூ. 5,321.12 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. அதற்கு முந்தைய 2011-2012 நிதி ஆண்டில் அந்த நிறுவனத்தின் இழப்பு ரூ. 4,109.78 கோடியாக இருந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைப் பொருத்த வரையில், 2012-2013 நிதி ஆண்டில் ரூ. 8,198 கோடி இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அறிவிக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.டி.என்.எல். நிறுவனத்தில் 20 ஆயிரம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2ஜி, 3ஜி அலைக்கற்றையை கூடுதலாக வைத்துள்ளதற்கு இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சுமார் ரூ. 10,117 கோடி செலுத்துவது உள்ளிட்ட பல விஷயங்களில் அமைச்சர்கள் குழு முக்கிய முடிவுகள் எடுக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.