தொலைத் தொடர்புத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி

தொலைத் தொடர்புத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு தொலைத் தொடர்பு ஆணையம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியிருக்கிறது.
தொலைத் தொடர்பு துறையில் இப்போது 74 சதவீத அளவுக்கு அன்னிய நேரடி முதலீடு செய்ய முடியும். இதில் 49 சதவீத அளவை நிறுவனங்கள் தாமாகவே பெற நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம். 25 சதவீத அளவுக்கான முதலீட்டுக்கு வெளிநாட்டு முதலீட்டு வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட தொலைத் தொடர்பு ஆணையமானது இந்த அன்னிய நேரடி முதலீட்டு விகிதத்தில் மாற்றத்தை அறிவித்துள்ளது. 49 சதவீத அளவிலான அன்னிய நேரடி முதலீடுகளைப் பெறுவதற்கு நிறுவனங்கள் தாமாகவே நடவடிக்கை எடுக்கலாம் என்ற விதிமுறை தொடர்கிறது. மீதமுள்ள பகுதியைப் பெற வெளிநாட்டு முதலீட்டு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும். தொலைத் தொடர்பு ஆணையம் எடுத்துள்ள இந்த முடிவு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் கடன் சுமையில் உள்ளதால் அன்னிய நேரடி முதலீட்டு விகிதத்தை உயர்த்த முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. 2011-2012 ஆண்டு விவரப்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மொத்த கடன் சுமை ரூ. 1,85,720 கோடியாகும். இதில் உள்நாட்டிலிருந்து பெறப்பட்ட கடன் விகிதம் ரூ. 93,594 கோடியாகும். வெளிநாட்டிலிருந்து கடனாகப் பெற்றுள்ள தொகை ரூ. 92,126 கோடியாகும். இந்த கடன் அளவைக் குறைக்கவே 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.